×

மு.ராஜேந்திரனின் காலாபாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

சென்னை: போரை அடிப்படையாக கொண்டு எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய காலாபாணி நாவலுக்கு ஒன்றிய அரசு சாகித்ய அகடாமி விருது அறிவித்துள்ளது. சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய, மாநில அளவில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில், தமிழ் தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என மொத்தம் 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு தளங்களில் இயங்கி வரக்கூடிய எழுத்தாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணமும், விருதும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான தமிழ் மொழிக்கான சிறந்த படைப்பாக எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய காலாபாணி என்ற நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் தாலுகாவில் வடகரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும், மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பும் முடித்துள்ளார். மேலும் திருக்குறள் குறித்த ஆய்வுகளுக்காக முனைவர் பட்டமும் பெற்றுள்ள இவர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தீவிர இலக்கியவாதியான இவரது நாவல், சிறுகதை, கட்டுரை, பயண நூல், செப்பேடுகள், ஆய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு என எழுத்துத்துறை சார்ந்த பல்வேறு தளங்களிலும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு மு.ராஜேந்திரன் எழுதிய காலாபாணி என்ற நாவலுக்கு தற்போது சாகித்ய அகாடமி விருது வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மன்னர்களை நாடு கடத்துதல் தொடர்பாகவும், அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த வரலாற்று சான்றுகள் தொடர்பாகவும் எழுதப்பட்ட இந்த நாவலின் முதல் பகுதியான 1801 என்ற வரலாற்று நாவல், ஏற்கனவே 2018-19ம் ஆண்டுகளில் சாகித்ய அகாடமியின் விருதுக்கான இறுதி பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அதே போன்று, இந்த ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,”கன்னட மொழியில் எழுத்தாளர் நியமிச்சந்திரா எழுதிய யாத் வஷேம் என்ற நாவலை அதே பெயரில் தமிழில் மொழிபெயர்த்ததற்காக நல்லதம்பிக்கும், அதே போன்று, தமிழில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூ நாச்சி என்ற நாவலை ஆங்கிலத்தில் ”தி ஸ்டோரி ஆப் எ பிளாக் கோட்” என்ற பெயரில் மொழிபெயர்த்ததற்காக என். கல்யாணராமனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : M. Rajendran , Sahitya Akademi Award for M. Rajendran's novel Kalapani
× RELATED ‘காலா பாணி’ நாவலை எழுதிய எழுத்தாளர்...